Tuesday, April 15, 2008

ஔவை

'மாசற்ற கொள்கை மனத்து அமைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு'
இதன் அர்த்தம் படிக்கும் போதே புரிந்திருக்கும்.இதயத்தில் சுத்தமான,பயமற்ற,கபடமற்ற,குற்றமற்ற,பகைமையற்ற,எண்ணங்கள் இருக்குமேயானால் உடம்பின் சாகாத்தன்மை அல்லது தெய்வத்தன்மை விளங்கும்.
இந்தக் குறள் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் வருகிறது என யோசனை செய்ய ஆரம்பித்தால் ஏமாந்துத்தான் போவோம்.இது ஔவைக்குறள்.ஔவையார் பாடியது.அவரும் இந்த கொள்கைப் படியே வாழ்ந்து வந்தார் என்பதும் உறுதி.
படிப்பறிவு இல்லாதவர்களும்,அதிக படிப்பில்லாதவர்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் ஔவையின் நீதி நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன் பட்டு வருகின்றன.ஔவையாரைப்பற்றி மீசைக் கவிஞன் சொன்னது அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கற்றோருக்கும்,அரசருக்கும்,தமிழ் மக்கள் அனைவருக்கும் திருக்குறள் போன்ற நூல்களைக் காட்டிலும் ஔவையின் நுல்களில் அதிகப்பற்றுதலும்,அபிமானமும் இருந்து வருகின்றன.ஔவையார் வெறும் நூலாசிரியர் மட்டுமில்லை..அவரது காலத்தில் அவர் ராஜநீதியில் மிகவும் வல்லவரென்று தமிழக மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்க
தூதில் நியமனம் பெற்றிருக்கிறார்.அவர் சிறந்த ஆத்மஞானி.யோக சித்தியில் உடம்பை முதுமை நோய்
சாவுகளுக்கிரையாக்காமல் நெடுங்காலம் காப்பாற்றிவந்தார்.

ஒரு தேசத்தின் நாகரீகத்திற்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளம்.தமிழ்நாட்டில்
கம்பனும்,திருவள்ளுவரும் ஆகிய பெரும் புலவர்களாலேயே தம் மனைவரிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்ட
ஔவையையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும்.

தமிழ் நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்து விட பிரியமா?ஔவையின் நூல்களை இழந்து விடப் பிரியமா?
என நம்மில் யாரேனும் கேட்பார்களேயாயின் 'மற்ற செல்வங்களையெல்லாம் பறி கொடுக்க நேரிடினும்
பரவாயில்லை...அவற்றை மீண்டும் தமிழ்நாடு ஈட்டிக்கொள்ளமுடியும்.ஔவைப்பிராட்டியின் நூல்களை
இழக்க ஒருபோதும் சம்மதியோம்.அவை அனைத்தும் மீண்டும் ஈட்டிக்கொள்ள முடியாத தனிப்பெரும்
செல்வங்கள்'என மறுமொழி உரைக்க கடமைபட்டிருக்கிறோம்.

ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கில்
'வீடு'என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும்,மனதிற்கும் எட்டாதாகையால் அதனை பிரித்து கூற இயலாது.
அதற்கு சாதனமாகிய தெய்வபக்தியை மட்டுமே முதல் அதிகாரத்தில் கூறிவிட்டு மற்ற அறம்,பொருள்,
இன்பம் என்ற முப்பாலை திருக்குறளில் அருளினார் திருவள்ளுவர்.இது மிகவும் அபூர்வச் செய்கை என
கருதப்பட்டது.ஆனால் ஔவையோ வீட்டுப்பாலையும் ஒரு சிறிய வெண்பாவில் அடக்கிவிட்டார்.

"ஈதலறம்!தீவினை விட்டீட்டல் பொருள்: எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித்- தாதரவு
பட்டதே இன்பம்: பரனை நினைத்திடும் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு."

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத்தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில்.
இதில் ஔவை ஒப்பற்றவர்.

தமிழ் நாட்டு நாகரீகத்திற்கு இத்தனை பெருஞ்செல்வமாகவும்,இத்தனை ஒளி போன்ற வாடா விளக்காகவும்,
தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நம் நாட்டு பெண்களுக்கு
ஒரு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி.

ஔவையைப்போல கவிதையும்,சாஸ்திரமும் செய்யக்கூடிய ஒரு ஆண்மகன் இங்கு பிறந்திருக்கிறானா?
ஏன் பிறக்கவில்லை?இயற்கையிலே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் ஆண்கள்
குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறது."

பெண்களிடம் பாரதி வைத்திருந்த உயர்வான நம்பிக்கைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
அந்த மீசைக்கவிஞ்னுக்கு என்னே பரந்த மனசு!!!!.

1 Comments:

At August 20, 2008 at 1:52:00 AM PDT , Blogger goma said...

பாரதியார் ஒரு கவிதையில்...."சேலை கட்டிய மாதரோ ...."என்று குறிப்பிடுகிறார் .அதன் உட்பொருள் என்ன ?பெண்களை மதித்துப் போற்றும் மகாகவி இப்படி ஏன் கூறினார்?என் சந்தேகத்தை நீக்கவும்.
என் தமிழ் எழுத்து ,நடை பழகத் தொடங்கியது ஒளவையின் கரம்,பாரதியின் கரம் பற்றிதான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home