Monday, April 28, 2008

தமிழ் வசன நடை - பாரதியார்

தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது.பல வருஷங்கள் ஆகவில்லை.தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்..ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது எனது கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் இப்படி எது எழுதினாலும் வார்த்தை சொல்கின்ற மாதிரி அமைந்து விட்டால் நல்லது.
பழக்க மில்லாத,அதி பழக்கமில்லாத ஒரு விஷயத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தால்..வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும்.சந்தேகமில்லை.ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என வாசித்து பார்த்துக் கொள்ளுதல் நல்லது.அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.சொல்ல வந்த விஷயத்தை மனசிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கோணல் திருகல் ஒன்றுமில்லாமல்,நடை நேராகச் சொல்ல வேண்டும்.முன் யோசனை இல்லாமல் நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை.ஆரம்பத்திலேயே மனதில் கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நல்லது.உள்ளத்திலே நேர்மையும்,தைர்யமும் இருந்தால்,கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும்.சண்டி மாடு போல ஓரிடத்தில் படுத்துக் கொள்ளும்.வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
வசன நடை,கம்பர் கவிதைக்கு சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தன்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாகவே
இருக்க வேண்டும்.இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடை இல்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை.தள்ளாட்டமே அதிகம்.உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால்,கை நேரான தமிழ்நடை எழுதும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home