Wednesday, September 25, 2019

13 - அடிமைத்தனம்

(அடிமைத்தனத்தை பாரதி எவ்வளவு வெறுத்தார் என்பதற்கு அவர் எழுதிய இக்கதையே சான்றாகும்)

உக்கிரசேனப் பாண்டியன் என்றொருவர் இருந்தார்.அவர் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர்.அவரிடம் பலவகை வேட்டை நாய்கள் இருந்தன.ஆனாலும் "பகதூர்" என்ற நாயிடம் அவர் மிகவும் அன்பு பாராட்டி வந்தார்.

ஒருசமயம் அவர் காடு ஒன்றிற்கு வேட்டைக்குப் புறப்பட்ட போது பகதூரையும் உடன் கூட்டிச் சென்றார்.அந்த நாய் முன்னர் வெகுகாலமாய் காட்டிலேயே இருந்தபடியால், காட்டைக் கண்டதும் மகிழ்ச்சியாக கண்ட கண்டவிடத்துக்கு எல்லாம் ஓடியது

பகதூர் பார்வைக்கு அழகாய் இருந்தது.மிகுந்த சதைக்கொழுப்பு அதற்கு உண்டு.அதன் உடம்பு தினமும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய் இருந்தது.அக்காட்டில் ஓநாய்கள் அதிகம் இருந்தன.ஓநாய் வேட்டை தனது திறமைக்கு சரியானதல்ல என நினைத்தான் பாண்டியன்.ஆகையால் ஓநாய்கள் பயமின்றி இருந்தன.

ஒருநாள் ஒரு ஓநாய் பகதூரைப் பார்த்து, அதிசயத்து அதனுடன் நட்புடன் பேச ஆரம்பித்தது.

ஓநாய் - நண்பனே! உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.உன்னிடம் சில கேள்விகள் கேட்டால் பதில் சொல்வாயா?

பகதூர்- என் எஜமானரின் எண்ணப்படி ஓநாய்களுடன் பேசுவது என் தகுதிக்கு ஒத்து வராது.ஆனாலும் என்னை அறியாமல் உன்னிடம் அன்பு ஏற்பட்டு விட்டதால்..நீ கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்..கேள்

ஓநாய் - நண்பனே! உன் அந்தஸ்து என்ன? நீ வசிக்கும் இடம் எது? இக்காட்டிற்கு ஏன் வந்தாய்? இவ்வளவு சுகமான வாழ்வு எப்படி ஏற்பட்டது? என்னும் விவரங்களை எல்லாம் சொல்லேன்..

பகதூர்- நான் உக்கிரசேன பாண்டியனிடம் இருக்கிறேன்.அவர் என்னை ராஜா மாதிரி கவனித்துக் கொள்கிறார்.எனக்கும் அவரிடத்தில் அலாதி பக்தி

ஓநாய்- நண்பனே! நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? காற்றிலும்,மழையிலும்,வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியுள்ளது.பல சமயங்களில் சாப்பிட ஏதுமின்றி பசிக்கொடுமை வேறு வாட்டும்

பகதூர் - போன பிறவியில் நீ பாவம் செய்திருப்பாய்.அதை இப்பிறவியில் அனுபவித்தேத் தீர வேண்டும்.நான் செய்த புண்ணியங்களின் காரணமாகவே இப்பிறவியில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது

ஓநாய்- நண்பனே! நானும் உன் எஜமானரின் நட்பை நாடி வரலாமா? சுக துக்கங்கள் சரிசமமாக இருந்தால் தான் இனிமையான வாழ்க்கை.ஆனால் எனக்கோ இதுவரை துன்பங்கள்தான்.

பகதூர் - சரி...என்னுடன் வா

இரண்டும் பேசிக்கொண்டே நடந்து வந்தன.திடீரென ஓநாய் நாயின் கழுத்தைச் சுற்றியுள்ள அகலமானத் தழும்பைப் பார்த்தது.

ஓநாய்- நண்பனே! உன் கழுத்தைச் சுற்றி என்ன தழும்பு?

பகதூர் - அது ஒன்றுமில்லை.என் கழுத்தைச் சுற்றி தங்கப்பட்டைப் போடப்பட்டிருந்தது.அதுதான்...

ஓநாய் _ (ஆச்சரியத்துடன்) ஓ..உன் எஜமானர் உனக்குத் தங்கப்பதக்கம் எல்லாம் போட்டிருந்தாரா? ஆமா..அதை ஏன் கழட்டி வைத்து விட்டாய்?

நாய்- என்னை வெள்ளிச் சங்கலியில் கட்டும்போதுதான் அதை என் கழுத்தில் போடுவார்

ஓநாய்- உன்னை ஏன் கட்ட வேண்டும்? யார் கட்டுவார்கள்/

பகதூர்- என் எஜமானர்தான் கட்டுவார்.அவரைத்தேடி வரும் மனிதர்கள் என்னைக் கண்டு பயப்படாமல் இருக்க

ஓநாய்- த்தூ... உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா..என்னை ஏமாற்றப் பார்த்தாயே! நீ ஒரு அடிமையாய் இருந்தும் எவ்வளவு ஜம்பமாகப் பேசினாய்! நான் சுதந்திரப்பிரியன்.எனக்கு எந்த எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.நான் எங்கும் செல்வேன்.எதையும் தின்பேன்.ஒருவன் ஆணைப்படி நடப்பது உனக்கு வேண்டுமானால் முடியும்.என்னால் முடியாது.நீ சென்ற பிறவியில் எவ்வளவு பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் இப்படி ஒரு அடிமையாக வாழ்வாய்?!!

என்று கூறியபடியே காட்டிற்குள் ஓடி மறைந்தது.பகதூரும், தன் அடிமை வாழ்வை எண்ணி வெட்கி, வேறு வழியின்றி தன் எஜமானரைத் தேடிப் போனது.
  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home