Thursday, September 26, 2019

14 - இந்து மதம்

பாரதியாரைக் காண ஒருநாள் காலை ஒருவர் வந்தார்.'பாரதி" என உரக்க சத்தம் போட்டுக் கொண்டு."பாரதி, உன்னை எங்கே பார்கக் முடியாமல் போய்விடுமோ? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நான் சிறையிலிருந்து வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.உன்னைப் பார்க்காமல் போவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தேன்.ஆமாம்.. நீ சௌக்கியமாய் இருக்கிறாயா?" என்றார்.

பாரதியாரை சாதாரணமாக யாரும்..நீ..நீ..என ஏக வசனத்தில் பேசியது கிடையாது.பாரதியும் அவரைப் பார்த்து,"ஜெயில் உனக்கு சௌகரியமாய் இருந்ததா?உன் உடம்பு பார்க்க அவ்வளவு நன்றாகயில்லையே! ஏன்? எல்லாவற்றையும் விவரமாகக் கூறு.அதற்குமுன் சாப்பிடு" என்றார்.

பாரதியாரும் ஏக வசனத்தில் பேசிய அவர்...சுரேந்திரநாத் ஆர்யா.தெலுங்கில் பிரசாரம் செய்து வந்தவர்.பாரதியின் நெருங்கிய நண்பர்.ஆங்கிலேயர் ஆட்சியில் ஆறு ஆண்டுக் காலங்கள் கடுங்காவல் தண்டனை முடிந்து வெளியே வந்தவர்.

சாப்பிட்டு முடிந்ததும் அவர், "பாரதி..நான் கிறிஸ்துவன் ஆகி விட்டேன். சிறையிலும், வெளியிலும் பாதிரிமார்கள் எனக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள்.தெரியுமா?" என்றார்.

"இப்படி ஆகும்னு சந்தேகம் எனக்கு இருந்தது. நீ என்ன செய்வாய்?ஹிந்து சமூகம் இருக்கிற நிலை இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறது.உயிரற்ற ஜன சமூகம்" என்றார்.

"பாரதி, நான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் எந்த ஹிந்துவும் என்னிடம் பேசத் துணியவில்லை.என்னிடம் பேசினாலே..தங்களுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ?"என பயப்படுகின்றனர்.ஆனால், கிறித்துவ பாதிரிகளோ எனக்கு எல்லா உதவிகளும் செய்தனர்.என் பிரசங்கங்களைக் கேட்பதும், கைகளைத் தட்டுவதுமே ஹிந்துக்களின் வேலை" என்று கூறியவர், சற்று நிறுத்தி.."நான் கிறிஸ்துவன் ஆனதில் உனக்கு வருத்தமா? " என்றார்.

பாரதியார் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை.பிறகு சொன்னார்,"மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு ஹிந்துவும், புத்தியும், தைரியமும்,தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு ஹிந்துவும், ஜன சமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்க முடியாமல்   ..வேறு மதத்திற்கு போய்விட்டால், அந்த ஜன சமூகத்தின் கதி என்னவாகும்? இனி நீ..பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்க வேண்டியவன்.உன்னுடைய தீவிர தேசபக்தியை..அவர்கள் மதப்பிராசரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டாலும் கொள்ளக்கூடும்" என்றவாறே கண்ணீர் சிந்தினார்.

"பாரதி, எனக்கு இந்த தேசத்தில் கௌரவம் இருந்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.நான் அமெரிக்கா போய் வருகிறேன்.போகுமுன் உன்னைப் பார்த்துவிட்டு போக வந்தேன்" என்றார் ஆர்யா.

"உன் தீர்மானத்தை மாற்ற நான் ஆசைப்படவில்லை.ஆனால் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை.ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும்,கொள்கைகளிலும் எத்தனையோ ஊழல்கள்...கசடுகள்.அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும்.அதை விடுத்து வேறு மதத்திடம் சரண் புகுவது என்பது அர்த்தமற்றது.

எல்லா மதங்களிலும் உண்மை உண்டு.ஹிந்துக்களிடம் நமக்கு அதிகம் ஆத்திரம் வரலாம்.அதற்காக அவர்களை ஒழிக்க,அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணக்கூடாது.அவ்வப்போது எத்தனையோ பெரியோர்களும், பக்தர்களும் தோன்றி, ஹிந்துக்களின் வாழ்க்கையைப் புனிதப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.உன்னைப் போன்றோரும் அப்படியே இருந்திருக்கலாம்.நீ கிறிஸ்தவன் ஆனது எனக்குப் பிடிக்கவில்லை" என்றார் பாரதி.

ஆர்யா வாளாயிருந்தார்.

"நான் உனக்கு உபதேசம் செய்வதாக எண்ணாதே! ஏதோ,எனக்கு உண்மை என்று தோன்றியதைச் சொன்னேன்.அமெரிக்காவிற்குப் போ.என்ன வேண்டுமானாலும் செய்.ஆனால், தேசத்தை மட்டும் ஒருநாளும் மறந்துவிடாதே" என்றார் மேலும்.

ஆர்யா சென்றார்.பல நாட்கள் தேசத்திற்காக பாடுபடுபவர்களை இந்த தேசம் காப்பாற்ற முடியாமல் போகிறதே என பாரதியார் வருத்தப்பட்டார்.

(ஆனால், இதே சுரேந்திரநாத் ஆர்யா, அமெரிக்காவில் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி வந்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்தார்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home