Wednesday, October 2, 2019

16- பிராமணன் யார்?

"நான் பிராமணன்..நீ சூத்திரன்" என்று சண்டை போடும் குணமுடையவர்களுக்கெல்லாம்,வஜ்ரசூசிகை என்னும்  வேதநூல் தக்க மருந்தாகும்.

அன்னிய ராஜாங்கத்தரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான்.அவன் ஒரு பூணூலைப் போட்டுக் கொண்டு ஏதேனும் ஒரு கிராமத்தில்,கிராமஃபோன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வது போல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, ஐயர்,ஐயங்கார்,ராயர் என பெயர் வைத்துக் கொண்டு,"நான் பிராமணன்.நான் தண்ணீர் குடிப்பதைக் கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது"என்று கதை பேசுகிறான்.

மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான்..பஞ்சத்தால் ஜனங்கள் சோறின்றி மடியும் போது,அந்தத் தாசில்தார் தனது  சம்பளம் அதிகரிக்கும் பொருட்டு"பஞ்சமே கிடையாது.சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்" என்று ரிப்போர்ட் எழுதி விடுகிறான்.ஆறிலொரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம்.பஞ்சநாளில் அது கூட கேட்பது பெருங்குற்றம்.அங்கனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலில் இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி.அதற்கும் அப்பால் உள்ள பஞ்சத்தை இல்லை என்று எழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு  என்ன பெயர் சொல்வது எனறு நமக்குத் தெரியவில்லை.இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு "சாஸ்திரியார்" எனப் பெயர் வைத்துக் கொண்டு நான் கௌதம ரிஷியின் சந்ததியிலே பிறந்தவன் என்பதாக பெருமை பாராட்டிக் கொள்கிறான். 

இப்படியே, வைசியத் தொழில், சூத்திரத் தொழில், என்று கௌரவத் தொழில் செய்வோரும்,இவற்றிற்குப் புறம்பான புலைத்தொழில்கள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்துவிட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்,

ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான்.அங்ங்னம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா?தேகத்தையா?பிறப்பையா?அறிவையா?செய்கையையா?தர்ம குணத்தையா?

அவனுடைய ஜீவனே பிராமணனென்றால்,அஃதன்று.முன் இறந்தனவும்,இனி வருவனவும்,இப்போதுள்ளவையும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது.

ஆகையால்..ஜீவன் பிராமணனாக மாட்டாதுஆயின் தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று.சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையாகத்தான் இருக்கிறது.
மூப்பு, மரணம்,இயல்புகள்,இயலின்மைகளிவை அனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன.

மேலும் பிராமணன் வெள்ளை நிறமுடையவன்.க்ஷத்திரியன் செந்நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஒரு நியாயத்தையும் காணவில்லை.இன்னும் உடல் பார்ப்பனனாயினும்,தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும்.ஆதலால், தேகம் பிராமணனாக மாட்டாது.ஆயின், பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமானால்..அதுவும் அன்று.மனிதப்பிறவியற்ற ஜந்துக்களிடமிருந்து கூட பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு.முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவிவகை தெரியாமலேயே இருக்கிறது.ஆகையால்,,பிராமணத்துவம் பிறப்புப் பற்றியதன்று.ஆயின், அறிவினால் பிராமணன் என்று கொள்வோமானால் ,அதுவுமன்று.க்ஷத்திரியர் முதலிய வர்ணத்தவர்களிற் கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளாயிருக்கிறார்கள்.ஆதலால்,அ றிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆக மாட்டான்.ஆயின் செய்கைப் பற்றி ஒருவனைப் பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று.பிராப்தம், சஞ்சிதம்,ஆகாமியம் என்ற மூவகைச் செயல்களும், ஒரேவிதமான இயற்கையுடையவனாகவே காணப்படுகின்றன.முன் செயல்களால் தூண்டப்பட்டு ஜனங்கள் எல்லோரும் பின் செயல்கள் செய்கிறார்கள்.ஆதலால் செய்கைப்பற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டான்.

பின் தர்மம் செய்பவனை பிராமணன் எனக் கொள்வோமெனில் க்ஷத்திரியன் முதலிய நான்கு வர்ணத்தவரும் தர்மஞ்செய்கிறார்கள்.ஆதலால் ஒருவன் தருமச் செய்கையைப் பற்றியே பிராமணனாகி விடமாட்டான்.

அப்ப்டியெனில் யார்தான் பிராமணன்?

எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம்,தொழில் என்பவை இல்லாததும்,உள்ளும், புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும்,அளவிடக்கூடாததும் அனுபவத்தால் உரைத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை,நேருக்கு நேராகத் தெரிந்து காமம்,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய், பாபம், மாற்சரியம்,விருப்பம்,ஆசை, மோகம்  முதலியவை நீங்கியவனாய், இடம்பம்,அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ..இங்ங்னம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது சுருதி, ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்.மற்றபடி ஒருவனுக்குப் பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.

பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக் கடவர்.க்ஷத்திரியர்,வைசியர்,சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும் இதுபோலவே லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க.அவ்வவலியக்கிணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ்வருணத்தினர் என்று மதிக்கத்தகக்வர்கள்.அந்த இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றை அடைய முயற்சி செய்ய வேண்டும்.போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான்.குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆக மாட்டான்.சோம்பேறியாக முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன பொருளை அழித்துத் தின்பவன் வைசியன் ஆக மாட்டான்.கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆக மாட்டார்கள்.இவர்களெல்லாரும் மேம்பாடுடைய ஆர்ய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார்.நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமானால் உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.

பொய் வகுப்புகளும்,போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும்.

இது நம் வேத சாஸ்திரங்களின் கருத்து

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home