Saturday, October 5, 2019

பாரதியாரும் சயன்ஸும் - 17

(சயன்ஸ் என்று சொல்லப்படும் பௌதிக சாஸ்திரத்திலும் பாரதியார் திறமையுடையவர்.அவர் மாணவர்களுக்கு எவ்விதம் பயில வைக்க வேண்டும் என எண்ணுகிறார் என்பதைக் காண்போம்)

சயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்,பரீட்சைகள் மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க வேண்டும்.பிள்ளைகளுக்கு அவர்களே பரிசோதனைக் கூடங்களில் சோதனைகள் செய்து பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வியாபார விஷயங்களுக்கு ரசாயன சாஸ்திரம் மிகவும் பிரயத்னமாகையால் ரசாயன பயிற்சியிலேயே அதிக சிரத்தைக் காண்பிக்க வேண்டும்.

கண்களுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும்,காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன எண்ற விஷயம் சயன்ஸ் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதில் சிறிது உண்மையிருந்தாலும், மனம் சந்தோஷமாகவும்,ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்ய மாட்டா என்பதை ஐரோப்பப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை.அதனால் சயன்ஸை நம்புவோர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.ஆதலால்,நமது ஆரம்ப பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப் பற்றிய பயம் மாணாக்கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.

உலகம் காற்றாலும்,மண்ணாலும்,நீராலுமே சமைந்திருக்கிறது.இவற்றை விட்டு விலகி யாராலும் வாழ இயலாது.இந்த மூன்றின் வழியாகவும் எந்த  நேரமும் ஒருவனுக்குப் பயங்கரமான நோய்கள் வந்துவிடக் கூடும் என்ற மூட நம்பிக்கையை ஆசிரியர்கள் இளஞ் சிறுவர்கள் மத்தியில் பதியும்படி செய்து விட்டார்கள்

சிறு வயதில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன.அசைக்க முடியாதன..மறக்க முடியாதன..ஆகவேதான் நமது நாட்டிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாகித் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்.

பூச்சிகளால் மனிதர்கள் சாவதில்லை...நோய்களாலும் சாவதில்லை.கவலையாலும், பயத்தாலுமே சாகிறார்கள்.இந்த உண்மை நமது தேசியய் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.

சயன்ஸ் பாடங்களை கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிதான தமிழ்நடையில் பிள்ளைகளுக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப்பெயர்களையே  உபயோகப்படுத்த வேண்டும்.

ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் போன்றவற்றிற்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும், பிராணவாயு, ஜலவாயு போன்ற பெயர்களையே வழங்க வேண்டும்.தமிழ்ச் சொற்கள் அகப்படவே இல்லையெனில் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம்..இந்த இரண்டு மொழிகளிலும் சொற்கள்  அகப்படவில்லையென்றால்தான் ஆங்கிலப் பதங்களை உபயோகப்படுத்தலாம்.

ஆனால்..அவற்றின் குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு ஆங்கிலப் பதங்களை ஒரு போதும் வழங்கக் கூடாது.

ரசாயனம் பற்றி கற்பிக்கும் போது...

1) உலகத்தில் காணப்படும் வஸ்த்துகள் எல்லாம் எழுபது சொச்சம் மூலப் பொருள்களாலும்,அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்து இருக்கின்றன. (சோதனைகள் செய்து காட்ட வேண்டும்)

2)அந்த மூலங்களில் பொன், வெள்ளி,செம்பு,கந்தகம் போல வழக்கில் உள்ள பொருள்கள் இவை.குரோமியம்,டைடானியம்,யுரேனியம் போல சாதாரண வழக்கில் இல்லாதன இவை.கன ரூபமுடையன இவை.வாயு ரூபமுடையன இவை..என முக்கியமான மூல பதார்த்தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்து காட்ட வேண்டும்.

3) ரசாயன சேர்க்கை,பிரிவு இவற்றின் இயல்புகள், விதிகள்(பரிசோதனைகள் மூலமாக விளக்கலாம்))

4)ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள்

5)பரமாணுக்கள்,அணுக்கள்,அணுக்கணங்கள் இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன

இவை போன்ற பொது அம்சங்களைப் பற்றிய முக்கியமான செய்திகளை, சாதாரண பேச்சு நடையில், ஆசிரியர்கள் வீட்டில் எழுதிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டி அவர்களை எழுதி வைத்துக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்

இயற்கை நூல் (physics),ரசாயனம் (chemistry), சரீர சாஸ்திரம்,ஜந்து சாஸ்திரம்,செடி நூல் (botany and zoology)இவையே முக்கியமாகப் போதிக்க வேண்டியவை.

பாரதியின் விஞ்ஞான அறிவு நம்மை வியகக் வைக்கின்றது.


Wednesday, October 2, 2019

16- பிராமணன் யார்?

"நான் பிராமணன்..நீ சூத்திரன்" என்று சண்டை போடும் குணமுடையவர்களுக்கெல்லாம்,வஜ்ரசூசிகை என்னும்  வேதநூல் தக்க மருந்தாகும்.

அன்னிய ராஜாங்கத்தரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான்.அவன் ஒரு பூணூலைப் போட்டுக் கொண்டு ஏதேனும் ஒரு கிராமத்தில்,கிராமஃபோன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வது போல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, ஐயர்,ஐயங்கார்,ராயர் என பெயர் வைத்துக் கொண்டு,"நான் பிராமணன்.நான் தண்ணீர் குடிப்பதைக் கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது"என்று கதை பேசுகிறான்.

மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான்..பஞ்சத்தால் ஜனங்கள் சோறின்றி மடியும் போது,அந்தத் தாசில்தார் தனது  சம்பளம் அதிகரிக்கும் பொருட்டு"பஞ்சமே கிடையாது.சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்" என்று ரிப்போர்ட் எழுதி விடுகிறான்.ஆறிலொரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம்.பஞ்சநாளில் அது கூட கேட்பது பெருங்குற்றம்.அங்கனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலில் இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி.அதற்கும் அப்பால் உள்ள பஞ்சத்தை இல்லை என்று எழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு  என்ன பெயர் சொல்வது எனறு நமக்குத் தெரியவில்லை.இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு "சாஸ்திரியார்" எனப் பெயர் வைத்துக் கொண்டு நான் கௌதம ரிஷியின் சந்ததியிலே பிறந்தவன் என்பதாக பெருமை பாராட்டிக் கொள்கிறான். 

இப்படியே, வைசியத் தொழில், சூத்திரத் தொழில், என்று கௌரவத் தொழில் செய்வோரும்,இவற்றிற்குப் புறம்பான புலைத்தொழில்கள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்துவிட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்,

ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான்.அங்ங்னம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா?தேகத்தையா?பிறப்பையா?அறிவையா?செய்கையையா?தர்ம குணத்தையா?

அவனுடைய ஜீவனே பிராமணனென்றால்,அஃதன்று.முன் இறந்தனவும்,இனி வருவனவும்,இப்போதுள்ளவையும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது.

ஆகையால்..ஜீவன் பிராமணனாக மாட்டாதுஆயின் தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று.சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையாகத்தான் இருக்கிறது.
மூப்பு, மரணம்,இயல்புகள்,இயலின்மைகளிவை அனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன.

மேலும் பிராமணன் வெள்ளை நிறமுடையவன்.க்ஷத்திரியன் செந்நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஒரு நியாயத்தையும் காணவில்லை.இன்னும் உடல் பார்ப்பனனாயினும்,தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும்.ஆதலால், தேகம் பிராமணனாக மாட்டாது.ஆயின், பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமானால்..அதுவும் அன்று.மனிதப்பிறவியற்ற ஜந்துக்களிடமிருந்து கூட பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு.முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவிவகை தெரியாமலேயே இருக்கிறது.ஆகையால்,,பிராமணத்துவம் பிறப்புப் பற்றியதன்று.ஆயின், அறிவினால் பிராமணன் என்று கொள்வோமானால் ,அதுவுமன்று.க்ஷத்திரியர் முதலிய வர்ணத்தவர்களிற் கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளாயிருக்கிறார்கள்.ஆதலால்,அ றிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆக மாட்டான்.ஆயின் செய்கைப் பற்றி ஒருவனைப் பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று.பிராப்தம், சஞ்சிதம்,ஆகாமியம் என்ற மூவகைச் செயல்களும், ஒரேவிதமான இயற்கையுடையவனாகவே காணப்படுகின்றன.முன் செயல்களால் தூண்டப்பட்டு ஜனங்கள் எல்லோரும் பின் செயல்கள் செய்கிறார்கள்.ஆதலால் செய்கைப்பற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டான்.

பின் தர்மம் செய்பவனை பிராமணன் எனக் கொள்வோமெனில் க்ஷத்திரியன் முதலிய நான்கு வர்ணத்தவரும் தர்மஞ்செய்கிறார்கள்.ஆதலால் ஒருவன் தருமச் செய்கையைப் பற்றியே பிராமணனாகி விடமாட்டான்.

அப்ப்டியெனில் யார்தான் பிராமணன்?

எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம்,தொழில் என்பவை இல்லாததும்,உள்ளும், புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும்,அளவிடக்கூடாததும் அனுபவத்தால் உரைத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை,நேருக்கு நேராகத் தெரிந்து காமம்,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய், பாபம், மாற்சரியம்,விருப்பம்,ஆசை, மோகம்  முதலியவை நீங்கியவனாய், இடம்பம்,அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ..இங்ங்னம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது சுருதி, ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்.மற்றபடி ஒருவனுக்குப் பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.

பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக் கடவர்.க்ஷத்திரியர்,வைசியர்,சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும் இதுபோலவே லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க.அவ்வவலியக்கிணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ்வருணத்தினர் என்று மதிக்கத்தகக்வர்கள்.அந்த இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றை அடைய முயற்சி செய்ய வேண்டும்.போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான்.குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆக மாட்டான்.சோம்பேறியாக முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன பொருளை அழித்துத் தின்பவன் வைசியன் ஆக மாட்டான்.கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டு சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆக மாட்டார்கள்.இவர்களெல்லாரும் மேம்பாடுடைய ஆர்ய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார்.நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வர வேண்டுமானால் உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்.

பொய் வகுப்புகளும்,போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும்.

இது நம் வேத சாஸ்திரங்களின் கருத்து

Friday, September 27, 2019

பாரதியும்..சிட்டுக்குருவியும் - 15

(சிட்டுக்குருவியினைப் பார்ப்பதில் பாரதிக்கு பரம ஆனந்தம்.சில சமயங்களில் அவற்றைப் பார்த்து பொறாமையும் பட்டிருக்கிறாராம்.இதோ..அவரே சொல்வதைப் படிப்போம்)

சிறிய தானியம் போன்ற மூக்கு..
சின்னக் கண்கள்..
சின்னத் தலை..
வெள்ளைக் கழுத்து..
அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு
கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய  பட்டுப் போர்த்த முதுகு
சிறிய தோகை
துளித் துளிக் கால்கள்

இவ்வளவும் சேர்ந்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம்.

இவ்விதமான உடலைச் சுமந்துக் கொண்டு என் விட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன.அவற்றில் ஒன்று ஆண்.மற்றொன்று பெண்.இவை தமக்குள்ளே பேசிக் கொள்கின்றன.குடும்பத்துக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்கின்றன.கூடு கட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டை இட்டுக் குஞ்சுகளை பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை உண்டாகும்,ஆஹா..உடம்பை எவ்வளவு லாவகத்துடன் சுமந்து செல்கின்றன.இந்தக் குருவிக்கு எப்போதேனுலும் தலைநோவு வருவதுண்டா? எனக்குத் தோன்றவில்லை.ஒருமுறையேனும் தலைநோவு வந்திருந்தால், முகத்தில் இவ்வளவு தெளிவு இருக்க நியாயமில்லை.

பயமும்,மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிகளுக்கும் உண்டு.இருந்த போதிலும் ..எப்போதும் மனிதருடைய நெஞ்சை செல்லரிப்பது போல அரிக்கும் கவலைத் தொகுதியும்,அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும்..அதன் கட்டுகளையும்,நோய்களையும்,துன்பங்களையும்,பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்தில் பறந்து செல்லமாட்டேனா?

ஆஹா..எத்தனை தேசங்களைப் பார்க்கலாம்.எத்தனை நாடுகள்..எத்தனைப் பூக்கள், எத்தனை மலைகள், எத்தனை சுனைகள்,எத்தனை அருவிகள்,எத்தனை நதிகள்,எத்தனை கடல்வெளிகள்! வெயில், மழை,காற்று,பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உண்ர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா?

குருவிக்கு பேசத் தெரியும்.பொய் சொல்லத் தெரியாது.குருவியில் ஆண்,பெண் உண்டு.தீராத கொடுமைகள் இல்லை.குருவிக்கு வீடுண்டு.தீர்வை கிடையாது.நாயகனில்லை..சேவகமில்லை..

தெய்வமே! எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா?

குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சிறிது அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான்..ஆராய்ச்சி,பக்தி,சங்கீதம்,கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்.குருவிக்கு இயல்பில்லை.ஆனாலும்..இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா?

இந்தக் குருவி என்ன சொல்கிறது..

விடு விடு விடு என்று கத்துகிறது.இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி என்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது .

விடு விடு விடு! தொழிலைக் கைவிடாதே!உணவை விடாதே!பேட்டை விடாதே..கூட்டை விடாதே..குஞ்சை விடாதே..உள்ளக்கட்டை அவிழ்த்து விடு.வீண் யோசனையை விடு.துன்பத்தை விடு.

இந்த விடு சொல்வதற்கு எளிதாயிருக்கிறது.இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று.உணர்ந்த பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை.

Thursday, September 26, 2019

14 - இந்து மதம்

பாரதியாரைக் காண ஒருநாள் காலை ஒருவர் வந்தார்.'பாரதி" என உரக்க சத்தம் போட்டுக் கொண்டு."பாரதி, உன்னை எங்கே பார்கக் முடியாமல் போய்விடுமோ? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நான் சிறையிலிருந்து வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.உன்னைப் பார்க்காமல் போவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தேன்.ஆமாம்.. நீ சௌக்கியமாய் இருக்கிறாயா?" என்றார்.

பாரதியாரை சாதாரணமாக யாரும்..நீ..நீ..என ஏக வசனத்தில் பேசியது கிடையாது.பாரதியும் அவரைப் பார்த்து,"ஜெயில் உனக்கு சௌகரியமாய் இருந்ததா?உன் உடம்பு பார்க்க அவ்வளவு நன்றாகயில்லையே! ஏன்? எல்லாவற்றையும் விவரமாகக் கூறு.அதற்குமுன் சாப்பிடு" என்றார்.

பாரதியாரும் ஏக வசனத்தில் பேசிய அவர்...சுரேந்திரநாத் ஆர்யா.தெலுங்கில் பிரசாரம் செய்து வந்தவர்.பாரதியின் நெருங்கிய நண்பர்.ஆங்கிலேயர் ஆட்சியில் ஆறு ஆண்டுக் காலங்கள் கடுங்காவல் தண்டனை முடிந்து வெளியே வந்தவர்.

சாப்பிட்டு முடிந்ததும் அவர், "பாரதி..நான் கிறிஸ்துவன் ஆகி விட்டேன். சிறையிலும், வெளியிலும் பாதிரிமார்கள் எனக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள்.தெரியுமா?" என்றார்.

"இப்படி ஆகும்னு சந்தேகம் எனக்கு இருந்தது. நீ என்ன செய்வாய்?ஹிந்து சமூகம் இருக்கிற நிலை இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறது.உயிரற்ற ஜன சமூகம்" என்றார்.

"பாரதி, நான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் எந்த ஹிந்துவும் என்னிடம் பேசத் துணியவில்லை.என்னிடம் பேசினாலே..தங்களுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ?"என பயப்படுகின்றனர்.ஆனால், கிறித்துவ பாதிரிகளோ எனக்கு எல்லா உதவிகளும் செய்தனர்.என் பிரசங்கங்களைக் கேட்பதும், கைகளைத் தட்டுவதுமே ஹிந்துக்களின் வேலை" என்று கூறியவர், சற்று நிறுத்தி.."நான் கிறிஸ்துவன் ஆனதில் உனக்கு வருத்தமா? " என்றார்.

பாரதியார் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை.பிறகு சொன்னார்,"மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு ஹிந்துவும், புத்தியும், தைரியமும்,தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு ஹிந்துவும், ஜன சமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்க முடியாமல்   ..வேறு மதத்திற்கு போய்விட்டால், அந்த ஜன சமூகத்தின் கதி என்னவாகும்? இனி நீ..பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்க வேண்டியவன்.உன்னுடைய தீவிர தேசபக்தியை..அவர்கள் மதப்பிராசரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டாலும் கொள்ளக்கூடும்" என்றவாறே கண்ணீர் சிந்தினார்.

"பாரதி, எனக்கு இந்த தேசத்தில் கௌரவம் இருந்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.நான் அமெரிக்கா போய் வருகிறேன்.போகுமுன் உன்னைப் பார்த்துவிட்டு போக வந்தேன்" என்றார் ஆர்யா.

"உன் தீர்மானத்தை மாற்ற நான் ஆசைப்படவில்லை.ஆனால் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை.ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும்,கொள்கைகளிலும் எத்தனையோ ஊழல்கள்...கசடுகள்.அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும்.அதை விடுத்து வேறு மதத்திடம் சரண் புகுவது என்பது அர்த்தமற்றது.

எல்லா மதங்களிலும் உண்மை உண்டு.ஹிந்துக்களிடம் நமக்கு அதிகம் ஆத்திரம் வரலாம்.அதற்காக அவர்களை ஒழிக்க,அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணக்கூடாது.அவ்வப்போது எத்தனையோ பெரியோர்களும், பக்தர்களும் தோன்றி, ஹிந்துக்களின் வாழ்க்கையைப் புனிதப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.உன்னைப் போன்றோரும் அப்படியே இருந்திருக்கலாம்.நீ கிறிஸ்தவன் ஆனது எனக்குப் பிடிக்கவில்லை" என்றார் பாரதி.

ஆர்யா வாளாயிருந்தார்.

"நான் உனக்கு உபதேசம் செய்வதாக எண்ணாதே! ஏதோ,எனக்கு உண்மை என்று தோன்றியதைச் சொன்னேன்.அமெரிக்காவிற்குப் போ.என்ன வேண்டுமானாலும் செய்.ஆனால், தேசத்தை மட்டும் ஒருநாளும் மறந்துவிடாதே" என்றார் மேலும்.

ஆர்யா சென்றார்.பல நாட்கள் தேசத்திற்காக பாடுபடுபவர்களை இந்த தேசம் காப்பாற்ற முடியாமல் போகிறதே என பாரதியார் வருத்தப்பட்டார்.

(ஆனால், இதே சுரேந்திரநாத் ஆர்யா, அமெரிக்காவில் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி வந்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்தார்)

Wednesday, September 25, 2019

13 - அடிமைத்தனம்

(அடிமைத்தனத்தை பாரதி எவ்வளவு வெறுத்தார் என்பதற்கு அவர் எழுதிய இக்கதையே சான்றாகும்)

உக்கிரசேனப் பாண்டியன் என்றொருவர் இருந்தார்.அவர் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர்.அவரிடம் பலவகை வேட்டை நாய்கள் இருந்தன.ஆனாலும் "பகதூர்" என்ற நாயிடம் அவர் மிகவும் அன்பு பாராட்டி வந்தார்.

ஒருசமயம் அவர் காடு ஒன்றிற்கு வேட்டைக்குப் புறப்பட்ட போது பகதூரையும் உடன் கூட்டிச் சென்றார்.அந்த நாய் முன்னர் வெகுகாலமாய் காட்டிலேயே இருந்தபடியால், காட்டைக் கண்டதும் மகிழ்ச்சியாக கண்ட கண்டவிடத்துக்கு எல்லாம் ஓடியது

பகதூர் பார்வைக்கு அழகாய் இருந்தது.மிகுந்த சதைக்கொழுப்பு அதற்கு உண்டு.அதன் உடம்பு தினமும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய் இருந்தது.அக்காட்டில் ஓநாய்கள் அதிகம் இருந்தன.ஓநாய் வேட்டை தனது திறமைக்கு சரியானதல்ல என நினைத்தான் பாண்டியன்.ஆகையால் ஓநாய்கள் பயமின்றி இருந்தன.

ஒருநாள் ஒரு ஓநாய் பகதூரைப் பார்த்து, அதிசயத்து அதனுடன் நட்புடன் பேச ஆரம்பித்தது.

ஓநாய் - நண்பனே! உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.உன்னிடம் சில கேள்விகள் கேட்டால் பதில் சொல்வாயா?

பகதூர்- என் எஜமானரின் எண்ணப்படி ஓநாய்களுடன் பேசுவது என் தகுதிக்கு ஒத்து வராது.ஆனாலும் என்னை அறியாமல் உன்னிடம் அன்பு ஏற்பட்டு விட்டதால்..நீ கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்..கேள்

ஓநாய் - நண்பனே! உன் அந்தஸ்து என்ன? நீ வசிக்கும் இடம் எது? இக்காட்டிற்கு ஏன் வந்தாய்? இவ்வளவு சுகமான வாழ்வு எப்படி ஏற்பட்டது? என்னும் விவரங்களை எல்லாம் சொல்லேன்..

பகதூர்- நான் உக்கிரசேன பாண்டியனிடம் இருக்கிறேன்.அவர் என்னை ராஜா மாதிரி கவனித்துக் கொள்கிறார்.எனக்கும் அவரிடத்தில் அலாதி பக்தி

ஓநாய்- நண்பனே! நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? காற்றிலும்,மழையிலும்,வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியுள்ளது.பல சமயங்களில் சாப்பிட ஏதுமின்றி பசிக்கொடுமை வேறு வாட்டும்

பகதூர் - போன பிறவியில் நீ பாவம் செய்திருப்பாய்.அதை இப்பிறவியில் அனுபவித்தேத் தீர வேண்டும்.நான் செய்த புண்ணியங்களின் காரணமாகவே இப்பிறவியில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது

ஓநாய்- நண்பனே! நானும் உன் எஜமானரின் நட்பை நாடி வரலாமா? சுக துக்கங்கள் சரிசமமாக இருந்தால் தான் இனிமையான வாழ்க்கை.ஆனால் எனக்கோ இதுவரை துன்பங்கள்தான்.

பகதூர் - சரி...என்னுடன் வா

இரண்டும் பேசிக்கொண்டே நடந்து வந்தன.திடீரென ஓநாய் நாயின் கழுத்தைச் சுற்றியுள்ள அகலமானத் தழும்பைப் பார்த்தது.

ஓநாய்- நண்பனே! உன் கழுத்தைச் சுற்றி என்ன தழும்பு?

பகதூர் - அது ஒன்றுமில்லை.என் கழுத்தைச் சுற்றி தங்கப்பட்டைப் போடப்பட்டிருந்தது.அதுதான்...

ஓநாய் _ (ஆச்சரியத்துடன்) ஓ..உன் எஜமானர் உனக்குத் தங்கப்பதக்கம் எல்லாம் போட்டிருந்தாரா? ஆமா..அதை ஏன் கழட்டி வைத்து விட்டாய்?

நாய்- என்னை வெள்ளிச் சங்கலியில் கட்டும்போதுதான் அதை என் கழுத்தில் போடுவார்

ஓநாய்- உன்னை ஏன் கட்ட வேண்டும்? யார் கட்டுவார்கள்/

பகதூர்- என் எஜமானர்தான் கட்டுவார்.அவரைத்தேடி வரும் மனிதர்கள் என்னைக் கண்டு பயப்படாமல் இருக்க

ஓநாய்- த்தூ... உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா..என்னை ஏமாற்றப் பார்த்தாயே! நீ ஒரு அடிமையாய் இருந்தும் எவ்வளவு ஜம்பமாகப் பேசினாய்! நான் சுதந்திரப்பிரியன்.எனக்கு எந்த எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.நான் எங்கும் செல்வேன்.எதையும் தின்பேன்.ஒருவன் ஆணைப்படி நடப்பது உனக்கு வேண்டுமானால் முடியும்.என்னால் முடியாது.நீ சென்ற பிறவியில் எவ்வளவு பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் இப்படி ஒரு அடிமையாக வாழ்வாய்?!!

என்று கூறியபடியே காட்டிற்குள் ஓடி மறைந்தது.பகதூரும், தன் அடிமை வாழ்வை எண்ணி வெட்கி, வேறு வழியின்றி தன் எஜமானரைத் தேடிப் போனது.
  

Tuesday, September 24, 2019

12- பழைய உலகம்

(பாரதியின் வரிகளிலேயே)

இந்த உலகம்  மிகப் பழமையானது.இதன் வடிவம் புதிதாகத் தோன்றும்.இயற்கை பழைமை.தனி வேப்ப மரம் சாகும்..ஒற்றை வேப்ப மரம் பிறக்கும்.வேம்புக் குலம் எந்நாளும் உண்டு.பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படியே அடிக்கும்.மழை, காற்று,பிறப்பு, வளர்ப்பு.நோய், தீர்வு,கட்டு, விடுதலை,இன்பம்,தீமை,துன்பம்,பக்தி, மறதி,நரைப்பு,துயரம்,கலக்கம் எல்லாமே எக்காலத்திலும் உண்டு.

கருவிகள் மாறுபடுகின்றன.இயற்கை செல்கின்றது.ஏன் சொல்கிறேன் தெரியுமா? நமக்கெல்லாம் தெரியாமல் புதிய நாகரிகம் பிறந்திருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்.நான் அதை நம்பவில்லை.உலகமே பழைய உலகம்.

ஏழை, பாடு எப்போதும் கஷ்டம்.பணக்காரனுக்கு பலவித சௌகரியங்கள் உண்டு.கோயில் காத்தவனுக்கு பஞ்சமில்லை.எவன் கை ஏறியிருக்கிறதோ அவனது பாடு கோலாகலம்.ஏழைக்குக் கஷ்டம்.

பணக்காரன்- ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று?

குடி,படை என்ற இரண்டாக மனிதஜாதி ஏன் பிறந்தது?எல்லோரும் ஒன்றுகூடி உழுது பயிரிட்டு பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தால் வந்தது?

இவையெல்லாம் எஜமானன் விசாரணைகள்.இந்த நிமிஷம் சௌகர்யமில்லை.ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருதுவோம்.

ஒரு செட்டி வியாபாரத்தில் நொந்து போய்த் தனது வீட்டு பஞ்சாங்கத்தையரிடம் "பணக்காரனாவதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.

நவக்ரஹ பூஜை செய்ய வேண்டும் என அய்யர் சொல்ல, "எவ்வளவு செலவாகும்?" என செட்டி கேட்டான்.

"பத்து பொன்னாகும்"

"என்னிடம் இப்பொழுது கொழும்புக்காசு..தென்னை மரம் போட்டது..ஒற்றைக் காசுக் கூடக் கிடையாது,இந்த நிலையில் என்ன செய்தால் பணம் கிடைக்குமென்று உம்முடைய சாஸ்திரம் சொல்கிறது? அதைச் சொல்லும்"

"நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்க மாட்டாய். அதனால் உனக்கு இந்த நிலைமை.இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் செல்வமுண்டாகலாம்"

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரசப்படவில்லை."அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையில் செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எந்தவிதமான லாபமுமில்லை.அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம்"

எந்தவிதமான மிருகங்கள் கூடி கட்சி ஏற்படுத்தி தன் குலத்தைத்தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை.மனித குலத்திற்கு மட்டுமே இந்த வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது

தீமை எக்காலத்திலும் உண்டு.விஷத்துக்கு மாற்றும்,நோய்க்கு தீர்வும்,வறுமைக்கு செல்வமும், அறிவுக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம்.

மனிதர்கள் கருவிகளையே மாற்றுகின்றனர்,மற்றபடி பழமையை விடாமல் நடத்தி வருகிறார்கள்

ஒரு வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டுமானால் ஒரேயடியாக முடியாது.பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போக வேண்டும்.பதறின காரியம் சிதறும்.மெதுவாக செல்வொனே குறியடைவான்.பழைய வழிதான் நல்வழி.அதுதான் எப்போதும் நடக்கக்கூடிய வழி.உலகத்தில் எல்லாக் காரியங்களும் படிப்படியாகத்தான் ஏற்கிறது.படீலென்று ஏறினால்,படீலென்று விழ நேரிடலாம்.காற்றாடி துள்ளிப் பாய்கிறது.சூரியன் ஒரே கணக்காக நடக்கிறான்.அவன் நெறி மாறுவதில்லை.தாழ்ப்பதில்லை.செல்லுகின்றான்..எப்போதுமே ஏறிச் செல்வான்.பழையவழிதான் வியாபாரத்துக்கு சரியான வழியாகும் 

Monday, September 23, 2019

பராசக்தியிடம் வேண்டுதல்

(பாரதியார் பராசக்தியிடம் வேண்டியது)

அன்னையே...விடுதலையே இன்பத்திற்கு வழி.விடுதலைப் பெற்றோர் வறுமையிலிருந்து மாறிச் செல்வமடைவார்கள். மெலிவும், நொயும் நீங்கி வலிமையும்,உறுதியும் பெறுவார்கள்.சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள்.துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்.
(பாரதியார் பராசக்தியிடம் என்ன வேண்டுவார் தெரியுமா?)

நான் விடுதலைப் பெறுவேன்.என் கட்டுகள் அறுபடும்.என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன்.என்னிச்சையிலே தீங்கு விளையாது.எனக்கும் துன்பம் விளையாது.நன்மைகளே நிறைவேற்றும்படியாக நிமிடம் தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக..உயிர் வேண்டுகின்றேன்.தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர்.

உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்து காக்கின்ற உயிர்.

அறிவு வேண்டுகின்றேன்.எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு..எங்கும் எப்போதும் அச்சமில்லாத வலிய அறிவு.

பிற உயிருக்கு தீங்கு தேட மாட்டேன்.என்னுடைய உயிருக்கும் தீங்கு வரக்கூடாது.

பராசக்தி, நின்னருளால் நான் விடுதலைப் பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்

Labels: ,