Monday, April 28, 2008

தமிழ் வசன நடை - பாரதியார்

தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது.பல வருஷங்கள் ஆகவில்லை.தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்..ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது எனது கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் இப்படி எது எழுதினாலும் வார்த்தை சொல்கின்ற மாதிரி அமைந்து விட்டால் நல்லது.
பழக்க மில்லாத,அதி பழக்கமில்லாத ஒரு விஷயத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தால்..வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும்.சந்தேகமில்லை.ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என வாசித்து பார்த்துக் கொள்ளுதல் நல்லது.அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.சொல்ல வந்த விஷயத்தை மனசிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கோணல் திருகல் ஒன்றுமில்லாமல்,நடை நேராகச் சொல்ல வேண்டும்.முன் யோசனை இல்லாமல் நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை.ஆரம்பத்திலேயே மனதில் கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நல்லது.உள்ளத்திலே நேர்மையும்,தைர்யமும் இருந்தால்,கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும்.சண்டி மாடு போல ஓரிடத்தில் படுத்துக் கொள்ளும்.வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
வசன நடை,கம்பர் கவிதைக்கு சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தன்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாகவே
இருக்க வேண்டும்.இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடை இல்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை.தள்ளாட்டமே அதிகம்.உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால்,கை நேரான தமிழ்நடை எழுதும்.

Sunday, April 20, 2008

உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன

நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Wednesday, April 16, 2008

மனிதனானால் காதல் செய்!

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது.ஒரே ஒரு தெய்வம் முடியும் வரை விரிந்து நிற்பது--அதுதான் காதல்.
காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை எழுதுதல் ஆகாதென்று தடுத்தால், அவர்கள்..நமக்கு தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள்; பறவைகளின் பாட்டையும்,மலர்களின் கந்தத்தையும்,குழந்தையின் சிரிப்பையும்,ஞாயிற்றின் ஒளியையும்,காற்றின் உயிர்ப்பையும்,விண்
மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது?
தெய்வத்தின் படைப்பு முழுதும் காதலுக்கு தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது.உலகம் முழுதும் தூது போகச் செய்கிற திறமை காதலர்க்கு உண்டு.
இளவேனிற் காலமே நான் எழுதுகிற ஓலை நீ
உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய் பிற
செடியானால் தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்
காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.

Tuesday, April 15, 2008

ஔவை

'மாசற்ற கொள்கை மனத்து அமைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு'
இதன் அர்த்தம் படிக்கும் போதே புரிந்திருக்கும்.இதயத்தில் சுத்தமான,பயமற்ற,கபடமற்ற,குற்றமற்ற,பகைமையற்ற,எண்ணங்கள் இருக்குமேயானால் உடம்பின் சாகாத்தன்மை அல்லது தெய்வத்தன்மை விளங்கும்.
இந்தக் குறள் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் வருகிறது என யோசனை செய்ய ஆரம்பித்தால் ஏமாந்துத்தான் போவோம்.இது ஔவைக்குறள்.ஔவையார் பாடியது.அவரும் இந்த கொள்கைப் படியே வாழ்ந்து வந்தார் என்பதும் உறுதி.
படிப்பறிவு இல்லாதவர்களும்,அதிக படிப்பில்லாதவர்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் ஔவையின் நீதி நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன் பட்டு வருகின்றன.ஔவையாரைப்பற்றி மீசைக் கவிஞன் சொன்னது அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கற்றோருக்கும்,அரசருக்கும்,தமிழ் மக்கள் அனைவருக்கும் திருக்குறள் போன்ற நூல்களைக் காட்டிலும் ஔவையின் நுல்களில் அதிகப்பற்றுதலும்,அபிமானமும் இருந்து வருகின்றன.ஔவையார் வெறும் நூலாசிரியர் மட்டுமில்லை..அவரது காலத்தில் அவர் ராஜநீதியில் மிகவும் வல்லவரென்று தமிழக மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்க
தூதில் நியமனம் பெற்றிருக்கிறார்.அவர் சிறந்த ஆத்மஞானி.யோக சித்தியில் உடம்பை முதுமை நோய்
சாவுகளுக்கிரையாக்காமல் நெடுங்காலம் காப்பாற்றிவந்தார்.

ஒரு தேசத்தின் நாகரீகத்திற்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளம்.தமிழ்நாட்டில்
கம்பனும்,திருவள்ளுவரும் ஆகிய பெரும் புலவர்களாலேயே தம் மனைவரிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்ட
ஔவையையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும்.

தமிழ் நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்து விட பிரியமா?ஔவையின் நூல்களை இழந்து விடப் பிரியமா?
என நம்மில் யாரேனும் கேட்பார்களேயாயின் 'மற்ற செல்வங்களையெல்லாம் பறி கொடுக்க நேரிடினும்
பரவாயில்லை...அவற்றை மீண்டும் தமிழ்நாடு ஈட்டிக்கொள்ளமுடியும்.ஔவைப்பிராட்டியின் நூல்களை
இழக்க ஒருபோதும் சம்மதியோம்.அவை அனைத்தும் மீண்டும் ஈட்டிக்கொள்ள முடியாத தனிப்பெரும்
செல்வங்கள்'என மறுமொழி உரைக்க கடமைபட்டிருக்கிறோம்.

ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கில்
'வீடு'என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும்,மனதிற்கும் எட்டாதாகையால் அதனை பிரித்து கூற இயலாது.
அதற்கு சாதனமாகிய தெய்வபக்தியை மட்டுமே முதல் அதிகாரத்தில் கூறிவிட்டு மற்ற அறம்,பொருள்,
இன்பம் என்ற முப்பாலை திருக்குறளில் அருளினார் திருவள்ளுவர்.இது மிகவும் அபூர்வச் செய்கை என
கருதப்பட்டது.ஆனால் ஔவையோ வீட்டுப்பாலையும் ஒரு சிறிய வெண்பாவில் அடக்கிவிட்டார்.

"ஈதலறம்!தீவினை விட்டீட்டல் பொருள்: எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித்- தாதரவு
பட்டதே இன்பம்: பரனை நினைத்திடும் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு."

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத்தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில்.
இதில் ஔவை ஒப்பற்றவர்.

தமிழ் நாட்டு நாகரீகத்திற்கு இத்தனை பெருஞ்செல்வமாகவும்,இத்தனை ஒளி போன்ற வாடா விளக்காகவும்,
தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நம் நாட்டு பெண்களுக்கு
ஒரு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி.

ஔவையைப்போல கவிதையும்,சாஸ்திரமும் செய்யக்கூடிய ஒரு ஆண்மகன் இங்கு பிறந்திருக்கிறானா?
ஏன் பிறக்கவில்லை?இயற்கையிலே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் ஆண்கள்
குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறது."

பெண்களிடம் பாரதி வைத்திருந்த உயர்வான நம்பிக்கைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
அந்த மீசைக்கவிஞ்னுக்கு என்னே பரந்த மனசு!!!!.

Monday, April 14, 2008

பறையர் என்பவர் உத்தமமான தொழில் செய்பவர்

'பறையர்' என்பது மரியாதை உள்ள பதம் இல்லை என கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர்
என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள்.ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத்
தமிழ் நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர்.

பறை என்பது பேரிகை.பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது
ஜயபேரிகை கொட்டிச்செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்த படியால் இவர்களுக்கு
இப்பெயர் வழங்குவதாயிற்று.'இது குற்றமுள்ள பதமில்லை' என்பதற்கு ருஜு வேண்டுமானால்
மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு 'பறையர் மகாசபை' என்று பெயர்
வைத்திருப்பதைக் காண்க.அவர்களை மிருகங்களைப் போல நடத்துவது குற்றமேயொழிய பறையர்
என்று சொல்வது குற்றமில்லை.

ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக்கொண்டு பிராமணரை அடிக்கும்படி
செய்யும்வரை சென்னை பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பார்ப்பானைத்தவிர மற்ற
ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள்.எல்லாரையும் அடிக்க பறையரால் முடியுமா?
பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்ய தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மத விரோதிகளின்
பேச்சைக் கேட்கலாமா? நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள்கும்பிடவில்லையா?

பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை.அவர்களுக்கு முதலாவது
வேண்டுவது சோறு.அவர்களை எல்லாம் ஒன்று திரட்டு.உடனே விபூதி,நாமத்தைப் பூசு.
பள்ளிக்கூடம் வைத்துக்கொடு..கிணறு வெட்டிக்கொடு.இரண்டு வேளை ஸ்னானம் பண்ணச்சொல்லு..
அவர்களோட சமத்துவம் கொண்டாடு.நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்.அவர்களை எல்லாம்
ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் சொல்லுங்கள்.நம்முடைய பலத்தைச் சிதற விடாதீர்கள்.
மடாதிபதிகளே...நாட்டுகோட்டைச்செட்டிகளே..இவ்விஷயத்தில் பணத்தை வாரிச்செலவிடுங்கள்.இது நல்ல பலன் தரக்கூடிய கைங்கரியம்.தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கரியம்.

'பறையரை' பரை (அதாவது ஆதிசக்தி முத்துமாரி)யின் மக்கள் என்றும் பொருள் சொல்வதுண்டு.நமக்கு மண்ணுழுது,நெல்லறுத்துக் கொடுக்கும் ஜாதியரை நாம் நேரே நடத்த வேண்டாமா?இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள்.
நாட்டிலுள்ள பறையர் எல்லோரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது.அவர்களை கை தூக்கிவிட்டு மேல் நிலைக்குக் கொண்டுவருதல் நம்முடைய தொழிலாகும்.அவர்களுக்கு நல்ல சோறு.நல்ல படிப்பு முதலிய சௌக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமையாகும்.

Saturday, April 12, 2008

முயற்சி

நமது தேசத்தில் தெய்வபக்தி அதிகமென்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமலிருந்தால்,
தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

தெய்வத்தாள் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். ( திருக்குறள் 619 )

(கடவுளை மட்டும் நம்பிக்கொண்டிராமல்,நாமும் சற்று முயற்சியுடன் உழைத்தால்
...கண்டிப்பாக அந்த உழைப்பிற்கேற்ற வெற்றி கிடைக்கும்.)

தெய்வத்தை நம்பினால் மட்டும் போதாது, நாமும் முயல வேண்டும்.
பாரதி என்ன சொல்கிறார்....

ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன் மீது கவனத்தை செலுத்தாமல்
நாம் மற்ற வேலைகளை பார்க்கிறோம்.அழத்தொடங்கினால் ...அந்த வேலையை விட்டுவிட்டு
குழந்தையை சமாதானப்படுத்த முயலுகிறோம். அது போல ஒரு காரியத்தில் ஊக்கத்தோடு ஈடுபடுவோமானால்,
எப்படியாவது ஒரு முடிவை தெய்வம் காட்டும்.

உதாரணத்துக்கு..பெண் விடுதலை..பல்லாயிரம் வருடங்களாக பெண்களை அடிமைப்படுத்தி
வருகிறோம்.தெய்வம் தானாக அவர்களுக்கு விடுதலை கொடுத்ததா..இல்லை..

"உங்களுடைய வழி இது தான்" என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.
இப்போது நாம் "இப்படி இருக்கமாட்டோம்" என்றால் "சரி...உங்களுக்காக இன்னொரு வழி
உண்டாக்கியிருக்கிறேன் அதன்படி நடவுங்கள்" என்று கூறி நம்மை ஊக்கப்படுத்தும்.
"நான் தூங்கத்தான் செய்வேன் " என்று தெய்வத்திடம் சொன்னால்..
தெய்வம் "சுகமாய்த் தூங்கு ...உனக்காக மெத்தென்று படுக்கை போட்டு
தருகிறேன்" என்று சொல்லி நம்மைத் தட்டி தூங்கப்பண்ணுகிறது.

"மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்கவேண்டும்..இதோ!
எழுகிறோம் என்றால் "எழுந்திரு குழந்தாய்...இதோ பார் உனக்கு இந்த பெரிய
வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை!" என்கிறது.

அதனால்...சகோதரிகளே! தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே
தேடவேண்டும். "முயற்சி திருவினையாக்கும் ' என்பது முன்னோர் உறுதிமொழி
நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம்.நம்முள் ஏதேனும் வருத்தம்
ஏற்பட்டால் அதை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் தெய்வத்தின் குழந்தைகள்.நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள்.
நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல்...ஆதலால் முயற்சி செய்வோம்.

தெய்வம் நன்மையைத்தான் செய்யும்.

Thursday, April 10, 2008

தமிழனுக்கு...---பாரதி



தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.
உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.
தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.
பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்க்ளும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்த்ங்க்கலும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.