Wednesday, May 21, 2008

குற்றங்கள்

கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும்.அவர்களும் மனிதர்கள்தானே.
ஏதோ தெரியாமல் குற்றம் செய்துவிட்டார்கள்.ஒழுங்கானபடி இருந்திருந்தால் செய்திருப்பார்களா?
தெளிந்த புத்தி இருந்தால் நடந்திருக்குமா?நல்ல நட்புடன் பழக்கப்படுத்தியுருந்தால் இந்த நிலைக்கு
இழிந்திருப்பார்களா?ஜன சமூகத்திலே சிலரை நாகரீக நிலைமைக்குக் கீழே அமிழ்த்து வைத்த குறை
யாரைச் சேர்ந்தது? இப்போது கூட சிறு பிள்ளைகள் குற்றம் செய்தால் கொடூர தண்டனை விதிப்பதில்லை
திருத்த பள்ளியிலே போடுவார்கள்.

குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றம் செய்யாதபடி
அறிவிலும்,ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும்.இந்த கருத்துடன் தண்டனை அளிிப்பவர்களை
தர்ம தேவதை மன்னிக்கும்.பழிக்கு பழி வாங்கி விட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற
அதிகாரம் மனிதனுக்கே கிடையாது.

ஏழையை பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான்.பேராசைக்காரனைக் கொஞ்சம்
ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான்.மூடனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்தால், இந்திரியங்களைக்
கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால்,உயர்ந்த பதவியிலிருப்போர் எப்போதும் நியாயத்தையே
செய்து காட்டினால்,பிறகு களவு இராது.

பள்ளிக்கூடங்கள்,தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால்,சிறைச்சாலைகள்
குறையும்.

பொதுவாக நம்மிடத்தில் ஒரு துர்க்குணமிருக்கிறது.தான் ஒரு குற்றம் செய்தால்,
அதை சுண்டைக்காய் போலவும்,அதே குற்றத்தை மற்றவன் செய்தால்,அதை பூசணிக்காய் போலவும்
நினைக்கிறார்கள்.மாமியார் உடைத்தால் மண்கலம்..மருமகள் உடைத்தால் வெண்கலம்.

மனிதனுக்கு உண்மையாகவே புத்தித் தெளிவும்,யோக்யதையும் தொடங்கும்போது,
பிறர் குற்றங்களை மன்னிக்கும் எண்ணம் உண்டாகிறது.மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து
விடுகிறான் அல்லது பிறர்க்கு தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க்காரணங்க்ள் சொல்லி அது
குற்றமில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறான்.குற்றத்திற்கு காரணம் அறியாமை.அதை நீக்கும்
வழி சத்சங்கமும்,தைர்யமும்.பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடமே காணப்படும்.
குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிக்சலோடிருப்பார்கள்.ஒரு தொழிலை சேர்ந்தவர்களுக்குள்ளே
பொறாமை உண்டாவது சகஜம்தானே!
நீதி என்பது பொது ஒழுக்கம்.ஒரு கிராமத்தில் வலியவனுக்கு ஒரு நியாயம்...எளியவனுக்கு
ஒரு நியாயம் என்றால் ..அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும்.இல்லாவிடின்..கிராமம் விரைவில்
அழிந்துவிடும்.ஜனங்கள் குற்றம் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ளவேண்டும்.நீதிக்காரர் குற்றம்
செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீதிக்காரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு.நியாய ஸ்தலங்களிலிருந்து நீதியை பரிபாலனம்
செய்வோர் ஒரு பகுதி.நீதி சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி.இவ்விரு திறத்தாரும்
கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சேர்ந்தது

Monday, May 19, 2008

புலால் உண்ணுவது பற்றி பாரதி

ஒரு சமயம் பாரதியாரிடம் அவரது நண்பர் புலால் உண்ணுவதைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்.அந்த உரையாடலின் தொகுப்பு.
நண்பர்- நீங்கள் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதும் போது எந்த வகுப்பினருக்கும் மன வருத்தம் ஏற்படாது எழுதுங்களேன்.உலகத்தை சீர்திருத்த வேண்டுமென்பதும்..உலகத்தாருக்கு இயன்றவரை நன்மை செய்ய
வேண்டுமென்பதே நீங்கள் எழுதுவதன் நோக்கம்.அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால்..நம்
கொள்கையைச் சிறிதும் கோபமில்லாமலும்..ஆத்திரப்படாமலும்..பிறர் மனம் நோகாமலும் இன் சொற்களால்
எழுத வேண்டும்.
பாரதியார்-மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்..நானும் அதுபோலவே நினைக்கின்றேன்.ஆனாலும் நம் நாட்டில்
பெண்களின் நிலைமை,ஏழைகளின் நிலைமை,சாதிக்கொடுமை,மிருகம்-பறவைகள் நிலைமை
இவற்றைக்குறித்து எழுதும் போது சிறிதும் ஈவு,இரக்கம் இல்லாத மக்கள் மீது கோபம் வருகிறது.
கோபத்தை அடக்க முயற்சிக்கிறேன்.ஆனால் முடிவதில்லை..ஆடு..மாடு..தின்பவரை நான்
கண்டித்து எழுதினால்..என் மீது அதிகம் கோபப்படுவார்கள்.ஊண் உண்ணுவதை நிறுத்த மாட்டார்கள்.
நண்பர் - மிருகங்களை கொன்று தின்னும் அநியாயத்தை நினைக்கும் போது,எனக்கும் அடக்க முடியாத வயிற்று
எரிச்சல் உண்டாகத்தான் செய்கிறது.அவற்றை வெட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆட்டை
வெட்டப்போகும் சமயத்தில் அது தலையை இங்கும்..அங்கும் ஆட்டிவிட்டால் வெட்டு சரியாக விழாது.
அதனால் அதன் வாய்க்கெதிரே சிறிது பச்சைப்புல்லை நீட்டுவார்கள்.அது அப்புல்லைத் தின்னமுகம்
நேரே நீட்டும் சமயத்தில் திடீரென ஒரு வெட்டு வெட்டி அதன் தலையை துண்டித்து விடுவார்கள்.
அதைப் பார்க்கும் போது..அந்த வெட்டுபவனை மன்னிக்கவே முடியாது என்றே தோன்றும்.வெட்டிக்
கொன்றுவிடும் இவர்களால் அந்த ஆட்டிற்கு திரும்ப உயிரைத் தரமுடியுமா?சங்கரனயினார் கோவில்
அருகேஒரு கிராமத்தில் மாடசாமி கொவில் ஒன்று இருக்கிறதாம்.அந்த மாடசாமி பல வருஷங்களுக்கு
முன்..கொலை,கொள்ளை முதலிய செயல்களில் வீரனாய் இருந்தானாம்.ஆனால் ஏழை,எளியோர் மீது
கருணை கொண்டவனாம்.அவன் இறந்த பின் அவனை அந்த இடத்தில் சமாதி வைத்து,சமாதியில்
கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்களாம்.அங்கு 200 அல்லது 300 கழுமரங்கள் நட்டு அவற்றில்
ஆடுகளை கோர்த்து வைத்திருப்பார்களாம்.அவை குற்றுயிராகத் துடிக்குமாம்...அவை இறந்த பின்
இரத்தமும்,நிணமும் ஒழுகிக் கொண்டிருக்குமாம்.அது ஒரு மகா பாதகச் செயல்.
பாரதியார்- நமது சில்லறை தெய்வங்களின் கோவில்களிலே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஆடுகள் வெட்டப்
படுவதை நினைத்தால்..எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது.கோபத்தோடு எழுதாதீர்கள்
என்கிறீர்கள்..இப்படி நடக்கையில் வேறு எப்படி எழுத முடியுமாம்?
இவ்விதமாக உரையாடல் நடந்து முடிந்ததும் பாரதியார் பத்திரிகை கட்டுரை ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

" தமிழ் நாடு மக்கள் தலைவர்களே...உங்கள் காலில் விழுந்து கோடி முறை நமஸ்காரம் செய்கிறேன்..புலால்
உண்ணுவதை நிறுத்துவதற்கு ஏதேனும் வழி செய்யுங்கள்"

Saturday, May 3, 2008

மனிதனுக்கு ஒரு விஷயம்

மானிடரே..நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை.தெய்வத்தின் இஷ்டப்படி
உலகம் நடக்கிறது.'தெய்வமே சரண்'என்று நம்பி எவன் தொழில் செய்கின்றானோ..
அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாக பயன் பெறும்.மனிதன்
தன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு பலியாக கொடுத்துவிட வேண்டும்.அதுவே யாகம்.அந்த
யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம்..வலிமை,விடுதலை,செல்வம்,ஆயுள்,புகழ் முதலிய
எல்லா விதமான மேன்மைகளும் கொடுக்கும்.இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில்
சொல்லப்படுகிறது.இதனை அறிந்தால் பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான
தெய்வ பக்தி சுபாவம்.ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப்
பயமில்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய
இந்த பூ மண்டலத்துக்கு நன்மை ஏர்படாது.உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு
வசப்பட்டுச் சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அகங்காரத்தை
வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமர நிலை அடையும்.தன்னை மற.தெய்வத்தை நம்பு
..உண்மை பேசு..நியாயத்தை எப்போதும் செய்.எல்லா இன்பங்களையும் பெறுவாய்.இப்போது
பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகிறன.அந்த புதிய யுகம் தெய்வபக்தியையே
மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது.ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை
பெறுவார்கள்.இது சத்தியம்.இதை எட்டு திசைகளிலும் முரசு கொண்டடியும்.இதுவே நான்
சொல்லக்கூடிய விஷயம்.